Thursday, June 15, 2017

எங்கள் முதலமைச்சருக்கு ஒரு மடல்

விக்கினங்கள் தீர்க்குமிறையின்
நாமம் கொண்ட உங்களையே
நம்பியுள்ளார்கள் ஈழத்தமிழர்கள்
அரசியலில் உமை அழிக்க
ஆழக்குழிகள் வெட்டப்படுகிறது

அண்ணனின் காலத்தில் அவர்மீது
பயம் பக்தி இரண்டும் இருந்தது..
என்றும் அவர் நாமத்திற்கு அது தகும்...
அதனாலேயே தமிழனை ஒருநிலைப்படுத்த முடிந்தது
இன்றைய அரசியல் சூழமைவோ உம்மிடம்
காலச்சுமையை கட்டாயம் திணித்திருக்கிறது

உம்மில் பயம் பலருக்கு இல்லாவிடினும்
பக்தி எல்லா மக்களுக்குமுண்டென அறியுங்கள்
சூழ்ச்சிகளின் கூடாரமாய் மாறிவிட்ட வீட்டில்
ஒற்றைச் செங்கோலாவது வளையாமல் நிற்கட்டும்

தேசியப்பட்டியலில் அன்று உள்நுளைந்த
தோசப்பீடையது இன்று நவீன இராஜதந்திரியாம்
வேசம்போட்டு அடிகழுவும் காமடியன் மேடைகளில்
அவமானப்பட்டும் திருந்தவில்லை அரைவேக்காடு
ஐயா நீதிப்பெருமகனே அஞ்சாதீர்கள் யாருக்கும்
ஆன்மீகவாதியை அரசியலுக்கு வரவைத்தது விதி
அது காலம் உம்மிடம் ஒப்படைத்த கடமை

பாவியுயிர்களின் நிர்வாணக்கோலத்தின்
சாட்சியத்தில் எழும்பியது அரசியல் கதிரைகள்
நிலத்தை விட்டு விரட்டப்பட வேண்டிய நீசர்களுக்கு
புள்ளடியிட்டு புதுவாழ்வைக்காட்டிய
பெரும்தவறை இப்போது உணர்கிறோம்

ஒன்றை மட்டும் சொல்கிறேன் பெருமகனாரே
நீங்கள் பக்குவமடைந்தவர் வயதிலும் அனுபவத்திலும் செயல்கள் முதல் உரைகள் வரை காத்திரமாயுள்ளது
ஐம்பூதங்களின் அசைவும் உம்மில் கண்டேன்

பதவியாசையில் பலர் விலையும் போகலாம்
பதறாமல் நினைத்ததை முடியுங்கள்
இளைஞர் முதல் முதியோர் வரை
உங்கள் முடிவையே எதிர்பார்க்கிறார்கள்
வீட்டின் தலைமைப் பதவியும் உமக்கே பொருத்தம்
ஆழுமையற்ற ஊழல்களுக்கு இரக்கம் காட்டாதீர்கள்

காய்த்த மரமதில் கல்லெறிவிழுவதைப்போல
குற்றவாளிகளுக்கு உம்மில் விமர்சனம் வரலாம்
செங்கொடி பறந்த சிங்காரத்தமிழனது தேசத்தில்
மங்காது உம் நாமம் வரலாறாய் வாழ்ந்திருக்கும்
நம்பிக்கையுடன்..
வன்னியூர் செந்தூரன்
(14.06.2017)


Tuesday, June 13, 2017

நீயும் நானும் இழந்தவையும் பெற்றவையும்



நினைவுகள் அண்மையாகவே நிற்கின்றன
நிஜங்களோ காலத்தை விட வேகம்கொண்டு
தீரத்தைக் காட்டி தீர்க்கதரிசனத்தை உரைக்கின்றன
இதற்கு விடைதேடின் கவலையே கருக்கொள்ளும்

அதிகாலை வெள்ளடியன் சேவலின் குரலெங்கே
ஆதவனின் தரிசனத்தை தொழுத கரங்களெங்கே
கையில் சக்கரைத் துண்டுடன் தேனீரெங்கே
வயிற்றை நிரப்பிய பயறிட்ட பாற்கஞ்சியெங்கே
வெங்காயம் மிளகாய் போட்ட பழையகஞ்சி எங்கே

தீப்பந்தம் பிடித்து பனங்கொட்டை பொறுக்கியது
மாடு ஈத்த பனங்காயில் இரண்டை எடுத்தாலும்
மூன்றாவதை தேடும் ஆரவாரப் போட்டி ~அவற்றை
உரப்பையிலே முதுகில் சுமந்து நடக்கும்ஆனந்தம்
அவையெல்லாம் அடியோடொழிந்து போனதெங்கே

கரப்பு தூண்டிலிட்டு விரால் ,கெளிறுடன் ,பனையேறி
கொட்டடைத்தும் பெட்டியன்,கச்சல் பிடித்தோமே
ஓலைக்குசினியின் கூரையில் படிந்த கறுப்பு ஒட்டறை
காயத்திற்கும் அது சிலநேரம் மருந்தாகும் அதிசயம்..
உறியில் தொங்கிய கறிச்சட்டி நினைவிருக்குதா..?

சோடி நாம்பனால் உழுதிட்ட சாலின் அழகு
சோழியன் மண்வெட்டியால் கட்டிய வக்கடவான்
கோழிகொத்தாமல் கூடடைத்த வட்டக் கொச்சி
பீலிவாய்க்காலில் சின்ன தண்ணீர்ச் சண்டை

வேம்பம்பூ வடகம் சாப்பாட்டில் பங்கேற்கும்
வேம்பங்கொட்டை பொறுக்கும் சிறார்கள்
வட்டுக்காய் வதக்கலின் தித்திப்புச்சுவை
பஞ்சையரிசிச் சோறுடன் தயிர்த்திரளை

பனையோலையால் வரியப்பட்ட வேலியின் எழில்
படலையை அடையாளமிடும் காயாப்பூட்டுத்தடி
முற்றத்தில் செங்கல்லால் சூழப்பட்ட செந்துளசி
மாங்கொப்பில் பாடியபடி தொங்கும் சொனி ரேடியோ

சாணத்தால் மெழுகிய நிலத்தின் கைவிரற் கோடுகள்
செம்மண்ணால் பூசிய மண்சுவரின் குளிர்மை
வரிச்சிட்டு பனையோலையால் வேய்ந்த வீட்டுக்கூரை
ஆங்காங்கு தொங்கியபடி நார்களில் கொசுக்கூட்டம்

முற்றத்து ஓரத்தில் கோழியடைக்கும் பிரம்புக்கூடை
அடை வைப்பதற்கென உமியிட்ட காட்போட் பெட்டி
காணியின் ஓரத்தில் மேடாய்தெரியும் பனம்பாத்தி
களைப்பைப் போக்கி ஓய்வெடுக்க சாக்குக்கட்டில்

வெய்யிலில் காய்ந்து சிவந்த பனாட்டுத் தட்டுக்கள்
உடல்பிளந்து கொடியில் தொங்கிக்காயும் ஒடியல் மரவள்ளிக்கிழங்கு அவியலுடன் மிளகாய்ச்சம்பல்
அடுப்பில் சுட்டு பிய்த்துண்ணும் பனம்பழத்தின் வாசம்

கிளித்தட்டு கிட்டிப்புளுடன் பாண்டிக்குழிகள்
கரியேறிப்போன மண் கறிச்சட்டியின் கைராசி
மண்ணடுப்புக்கருகில் நாலைந்து திருகணைகள்
குப்பிவிளக்கோ,உப்பிட்டு எரியும் சிக்கனவிளக்கோ
அரிகன் லாம்போ அவசியம் இருக்கும் இரவில்

நுளம்புத்தொல்லைக்கு வேம்பம் புகையே பரிகாரம்
குளிர்காத்தில் நெருப்பில் கூதல் காய்தல் ஒருசுகம்
உடலை தூய்மையாக்கும் ஒடியற்கூழ் அடிக்கடி
உபாதை போக்கும் ஆயுள்வேத பேதி மாத்திரை
சுதந்திரமாய் கழிவகற்றும் சுற்றுவெளிக்காடுகள்

வீட்டுப்பத்தியில் சேர்க்கப்பட்ட விறகுக்கட்டுக்கள்
அடுப்பு புகட்டில் ஆடியபடி பன்ன நீத்துப்பெட்டி
கோடிச்செல்வமாக மதிக்கப்பட்ட கொம்பறை
கோமாதாவிற்கும் ஒருபட்டி தனித்தனி பெயர்கள்
புல்லுப்பாயில் படுக்கும் உல்லாசமே தனியானது

அரிவிச்சிந்து பாடல் கேட்ட களனிப்பரப்புகள்
குருவிக்காவல் குரங்குக்காவல் பரண்கள்
போர்வைத்து பூரிப்படைந்து பொங்கலிடல்–மாட்டால்
சூடடித்து பொலிதூற்றும் குல்லமும் தென்றலும்
வளந்து நெல்லெடுத்து வீட்டில் கட்டும் வழக்கம்

இறுங்கு திணை குரக்கன் சாமை உணவுகளின் உரம்
இடையிடையே கோவிலில் ஊர்கூடி மோதகமடை
பாரங்கள் ஏற்றிவரும் பலகை மாட்டுவண்டில்
கூடாரமமைத்து ஊர்போகும் திருவிழாக்காண
பற்றைகள் காடுகளுக்கிடையில் ஒற்றையடிப்பாதை

அம்மியில் அரைத்த கறி அமிர்த வாசம்
ஆட்டுகல்லிலரைத்துச்சுட்ட உழுத்துவடை ஆகா
வந்தாரை வரவேற்றமர்த்தும் மண் திண்ணை
வாழை இலையில் ஊர் விருந்து நல்ல மருந்து

ஆழப்பெருங்கிணற்றிலும் நீர்இறைக்கும் துலா
ஆடிமாதத்தில் பழப்புளிப்பன்னமும் ஊறுகாயும்
சோழகக்காற்றிலும் சொர்க்கமாய் சொப்பனம்
மாரி வந்தால் அவித்தகச்சானும் கோப்பியும்
மரகதப்பொற்காலமது இதுமட்டுமல்ல ஏராளமுண்டு

நானும் நீயும் பெற்றதென்ன இன்று
இரசாயன உலகின் வெப்பக்காற்றை
நோய்க்கூடான தகதகப்பு உடலை
துணையின்றினும் கைபேசி தேடும் மனதை
திரைநாடகமின்றி தூங்காத விழிகளை

இயந்திரங்களுடன் அல்லாடும் வாழ்வியலை
கட்டடக் காடுகளின் அழகுப் பூரிப்பை
இயற்கைக்கு முரணான செயற்கையின்
அத்தனை சூட்சுமங்களுக்குள்ளும் மாண்டுவிட்டோம்
இதற்கு நாமிட்ட பெயர் நாகரீகம் விஞ்ஞான வளர்ச்சி

அத்தனை பொக்கிசங்களையும் இழந்து
இன்பமற்று அலைகிறோமே
இன்னுமேன் உணரவில்லை
உண்மைகளைப் புதைத்துவிட்டோம்
போலிப் புன்னகைகளை சூடிக்கொண்டோம் இன்று
மனங்களைக் கொன்றுவிட்டு எங்கோ
மனிதத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்

எம் பழக்கங்களை மாற்றியபோதே
பண்பாடும் மாறிப்போனது
பாரம்பரியம் அன்றே பாடையேறியது
அடையாளத்தை தொலைக்குமினம்
வரலாறிழந்து போகுமென்பது வெறும் கதையல்ல
யாரோ ஒருவனின் பண்பாட்டில்
அவனியில் பெருமையாய் அலைகிறோம்
–வன்னியூர் செந்தூரன்–


Wednesday, May 17, 2017

உயிர்க்கொடையை மறப்பீரோ...?


வேட்டொலி   முழங்கிய நாட்டினிலே
காட்டிடை கனல் வளர்த்த வீரர்களே
தோற்றிடா கொள்கையின் தொட்டிலதில்
ஊட்டிய தவமதின் உன்னதப் பேறுகளே

முள்ளிவாய்க்காலை முடிவென்று யார் சொன்னது
அள்ளித்தின்ற மண்ணில் ஆயிரமாயிரம் கதையுண்டு
அம்மணமாய் கிடந்த உடல்கள் அத்தனையிலும்
அழியாத அஸ்திரத்தீயால் வரலாறு வரையப்பட்டது

இறுதியுரையின் முடிவை மீண்டும் கேளுமப்பா
உறுதிபட உரைத்தாரே எம் இனத்தின் அப்பா
வஞ்சனையின் போகமென்று வருந்தி நீயும்..
வலுவிழந்து போகாதே போராடு காலத்தோடு..

தியாகங்கள் உறங்கும் பதியின் மேலே
கோமாளிகளின் அரண் எழட்டும்– இன்னும்
உங்களின் அடிகளை மாற்றான் மறக்கவில்லை
எழுந்துவிடுவீர்கள் என்ற பயமாக கூட இருக்கலாம்

ஆனந்தபுர முற்றுகையின் இறுதிச்சன்னத்திலே
வானுயந்து நின்றது வீரப்பரம்பரையின் தீரம்
இலட்சக்கணக்கான எதிரிகளை பலியெடுத்தே
தமிழனின் கணைகள் மௌனமானது தெரியுமா ?

வெற்றுக் கப்பல்களை அனுப்பிய பேராசைகளால்
இரகசியம் கசியவிட்ட வெற்று போலிகளால்
பதவிக்காக மௌனமிருந்த அரசியல் கதிரைகளால்
சேர்ந்து வந்த இருபது தேசங்களாலே இந்நிலை
இது எம் பலவீனமல்ல ..தமிழனை அடக்கிப்பார்க்க
இருபது அரசுப்பலம் தேவைப்பட்டிருக்கிறதே..

ஆனால் இன்றைய நிலை என்ன..?
பிள்ளையை கிள்ளியவனே தொட்டிலும் ஆட்டுகிறான்
தாயின் முலையறுத்தவனே –சேய்க்கு
பால்மாவை பரிந்துரை செய்கிறான்
நிலாக்காட்டி சோறூட்டிய தந்தை
காணாமல்போனார் பட்டியலில்– இன்று
வெசாக்கூட்டு வெளிச்சத்தால்
நகரத்து நிலவதோ வெட்கத்திலே...

பூகோளச் சுற்றுகைச் சூட்சுமப்புள்ளி ஒருநாள்
பாராமல் போகாது தமிழனை ஒருமுறையேனும்
அரசியல் பேசும் வியாபாரிகளை காலம் துரத்தும்
நாயகர்கள் காவியங்கள் சாசனமாய் வரையப்படும்
என் இனத்து இளைய தலைமுறைக்கு சொல்லிக்கொடு கட்டாயம் அஞ்சாதே
முந்தையரின் வீரகாவியத்தை நினைவுபடுத்தியிரு..
எத்தனை காலம் கடந்தோடினும் ~எமக்கு
பொற்காலத்தவமென்பது அக்காலமே.,,

~வன்னியூர் செந்தூரன்~
(Google Image)

Tuesday, April 25, 2017

குருவிகளின் கும்மாளமெல்லாம்

குருவிகளின் கும்மாளமெல்லாம்
கிளைக்கு சொந்தமில்லையென
கூவிச்சொல்கிறது காலக்காற்று..
விழுதுகளை நம்பியதாலே வேரது
பாதிப்பலமிழந்ததாகப் பேச்சு..
தனிமைவாழ்வில் சிறைப்படும் போது
தத்துவம் தித்திக்கும் காலம் கடந்து...


என்ன பதில் சொல்லப்போகிறோம்...?

செம்புழுதி மோகம் தொலைத்த கருவீதியே
செங்குருதி சிதைத்தோடியதை மறைத்தாயா..?
பொங்காது பொலிவிழந்த பேரலையே
சிங்காரத்தமிழை சிதைப்பவரை அழிப்பாயா..?
அகத்தியனைப் போன்ற புலஸ்தியன் புரமோ
பொலநறுவையாக அவதாரமாச்சு அன்று
மருதச்சோலையாம் முதலிக்குளமோ
மொரவேவ என்று முறுக்கேறியது இன்று
திரிகோணமலை என்றுரைக்க கூசுதப்பா பலருக்கு
றிங்கோ என்றால் பெருமைப் பூரிப்புத்தானே..
யாழ்ப்பாணம் என்ற தூயதமிழ்ச்சொல்லை
படித்தவர் முதல் பாமரர் வரை பலர் மறந்ததால்
ஜப்(f)னா என்றாலே நாகரீகமான பதமாக பதிவாச்சு
மீன்பாடும் தேன் நாட்டுக்கு சாபக்கேடோ..¡
பரப்பில் பெரிய தேசமொன்று பறிபோனது வேகமாக..
பற்றி(batti) என்றுரைத்தால் வெற்றிமொழி போலும்
நாட்டை இழந்த நாம் ஊரையுமிழக்கத் துடிக்கிறோம்
இனமழித்தகயவர்கள் பச்சோந்திகள் சிலரின் பதிகள்
பியந்த சேர் ,தமித்த சேர், உருகுகிறார் சில சீதைகள்
பிணத்திலிருந்து தாலியறுத்த தனவந்தனோ
சனத்தின் உரிமைக்காய் தத்துவம் உளறுகிறான்.
சலுகையென்றால் வாந்தியைக்கூட நக்குவார் சிலர்
அரச வேலைக்காய் அமைச்சர்கள் வேணுமாம்
அரசியல் பணியில் பூரண தமிழ்ப்பற்றாளர்களாம்
அண்ணா.உன் இடம் இன்றல்ல என்றும் வெற்றிடமே
நுவரவாவி எனுமிடத்தின் ஆட்சி தமிழனிடமிருந்தது
அனுராதபுரமாக மாற அனைத்துமிழந்தோமே...
இயக்கச்சி ஐயக்கச்சியாக அவதாரம் மாறியாச்சு
யாழ்ப்பாணமும் “ஏலப்பாண”ஆக மாறமுயலும்
ஒன்றைப் புரிந்துகொள் ஒற்றுமைகெட்ட தமிழா
வரலாறு தான் எம் இருப்பு.
இருப்பில்லாமல் இனத்துக்கேது சிறப்பு
முள்ளிவாய்க்காலை மூலதனமாக்கும் மேதாவிகளே
ஒற்றை நினைவுக்கல் நடமுடிந்ததா உம் அரசியலால்
நல்லாட்சியும் நல்லிணக்கமும் நாசமாய் போக..
ஒஸ்கார் விருதுக்கு விண்ணப்பியுங்கள் நடிகர்களே
உங்களுக்கே வெற்றிக்கிண்ணம் திலகங்களே
ஓர் தனித்த இரவுகள் உங்களுக்காக இருக்கும்
மயான அமைதியில் மனம் தீயாய் சுட்டெரிக்கும்
குற்றப்பத்திரிகைகள் கூர்வாளாய் கிழிக்கும்
கல்லறைக்கனவுகளின் நிதர்சனம் தெளிவாயிருக்கும்
காலம் கடந்து தவறுகள் புரியப்படும் அந்நேரம்~உம்
கதிரைகள் கூட களவாடப்பட்டிருக்கும் ....


~வன்னியூர் செந்தூரன்~


Sunday, April 9, 2017

"ஒரு கட்டில் கதறுகிறது "

அருந்ததிக்கு ஆணைவைத்து
அம்புலிக்கு விடைகொடுத்து
பட்டமரம் ஒட்டியபின் 
தட்டுவார் எனது மேனி
புனிதமான பந்தம்கண்டு நான்
பூரித்தும் மகிழ்ந்ததுண்டு
அதுவும் ஒரு காலம்
பஞ்சத்தை தொட்ட என்
பாழாய்ப்போன வீட்டுக்காரன்
விற்றுவிட்டான் என்னையும்
வீட்டோடு சேர்த்து ஒரு
விளங்காமல் போனவனுக்கு
அன்று முதல் எனக்கு
ஆரைச்சனியும் தொடங்கிற்று
அலங்கார விடுதியாய்
அரண்மனையும் ஆகிற்று
அருவருப்பும் கூடிற்று
வகைவகையாய் வருவார்கள்
வண்ணவண்ண உடையணிந்து
ஆடைகள் எல்லாம்
அம்மணம் ஆனதால்
அருவருக்கிறது ஜடம்கூட
பஞ்சணையில் நெஞ்சமைத்து
பணத்தால் உடல்கழுவும்
பாதகரை தினம் பார்த்து
பதறுது இந்த ஜடம்
காசுத்தராசில்
கணத்துளி உழைப்பிடும்
கயவர்களை கண்டு இந்த
கட்டிலுமே கதறுகிறேன்
காப்பாற்ற வருவீரோ
கண்ணியமான மானிடரே ...?
...... "வன்னியூர் செந்தூரன்"...

Tuesday, April 4, 2017

காடு போய் நாடு போய் வீடு போனது

வீட்டின் விஞ்ஞாபனமெல்லாம்
விலையாகிப் போனதையா
கட்டியவன் எவனோ
காத்தவன் எவனோ
திட்டம் தீட்டியவனும் எவனோ–இன்று
கொட்டமிடுபவன் எவனோ

கட்டிய மேசனுமின்றில்லை
கல்லுத்தூக்கிய கூலியுமின்றில்லை
வாடகைக்கு வந்த பேடி
வக்கணையாய் பேசுதப்பா
கோடி மலை குவிக்கவெண்ணி
குலத்தையே அழிக்குதப்பா

யானை சிங்கம் வரக்கூடாதென
கட்டுவெடி கட்டிய காலமோ
கப்பலேறிப் போனதப்பா
யானையின் கூடாரமாய் இன்று
சோரம்போனது கூரையப்பா

சுற்றியுள்ள வாழைத்தோப்போ
கத்திக்கத்தி கதறுதப்பா
தந்திர நகர்வென்று மத்திரித்து மழுப்புதப்பா
சுடுகாட்டுச் சுந்தரியின் அந்தரப்புத்திஜீவி

யானை ஏதாவது போடுமென
வாலைக் கிழப்பிப் பார்த்து
வாய்பிளந்து நிற்குதப்பா
வந்தவழி மறந்த வானரங்களிங்கு

பழுப்பேறிய மூளைக்கு பாடை என்றோ..?
கறுப்பு கண்ணபிரானுக்கும் கதிரை ஆசையாமே
சுத்துமாத்து சுண்டி மோதிரத்தை
சூலத்தில் இறுக்கினாலே புண்ணியமாம்

வீட்டை விட்டு இடம்பெயர்தல் முறையல்ல
விசமிகளை அகற்று வீடு தூய்மைபெறும்
களனியை கைவிடாதே களைகளை பிடிங்கியெறி
வளமான போகத்தை அறிவாலே அமைத்துப்பார்.

–வன்னியூர் செந்தூரன்–

Wednesday, March 29, 2017

தீப்பொறிகளையும் பாரும்

உரப்பைச்சுவரும்
தேக்கங்கம்பியும்
தந்தவலிய தரையக
காவல் வீட்டில்
மெழுகுதிரிச்சிரசுகள்
உருகும் விடியும்வரை
தேச ஒளிக்காய்

அக்கம்பக்கமெல்லாம்
மிருகங்களின் குடிமனை
அப்பப்போ பெய்யும்
அமிலமழையும் வேறு
இரும்புத்துருக்கற்றும்
எமையணைக்கலாம்
சொல் என் தோழி
உன் கனவு எது ..?
கேட்டது ஒரு நெருப்பு

சொட்டும் சங்கீதத்தில்
தட்டும் தாளத்திற்கு
மெட்டுப்போடும்
சலங்கைக் காலொன்று
சரிந்ததால் நான்
ஒற்றைக்காலில்..
அன்னைதேசம் ஒளிகாணவென்
ஆவியை உருக்குவேன்
ஆசை இது தான்..

பலகாலம் வாழ்ந்திங்கு
பயனேதுமுண்டோ
பாரென் தோழி
சிலகாலம் வாழ்ந்தாலும்
சீர்தூக்கிப் புகழ்சூடி
உயிர்வாழும் வரலாற்றில்
பதிவேனே நிலையாகி..
தீவிழி உரைத்தாள்
மின்னல் புன்னகையுடன்..

மருதாணி முத்தமிட்ட
மங்கையின் மடலில்
எழுத்தாணி தவழ்ந்த
விரல்நுனித் திடலில்
உரிமையோடு ஒரு
உயிருண்ணும் இரும்பு
ஒட்டிக்கொண்ட மர்மமென்ன..?

––––––––––வன்னியூர் செந்தூரன்–––––


நம்பிக்கை அதிகாரத்தில்

நம்பிக்கை அதிகாரத்தில்
நலிந்தே போகும் நாட்கள்

வெந்துபோன காயங்களில்
தந்திர மருந்தாகும் மாயங்கள்

ஈரமான தேகத்தின் இடுக்குகளை
இடுகாடுகள் முற்றுகையிடுகின்றன

கைதியின் சாசனங்கள் என்றும்
கம்பிக்கதவைத் தாண்டாது போல

கரிசல்களின் கரிசனை கூட
கருவேப்பாய் வாழ்ந்திருக்கும்

வன்னியூர் செந்தூரன்


"இல்லை"

காலில் செருப்பில்லை
கனல் வெயிலுறங்கவில்லை

பையில் பணமில்லை
பரிகசிப்பார் யாருமில்லை

கற்களும் முட்களும்
காலை வருத்தவில்லை

பாறைகள் மோதினாலும்
பாதத்திற்கு வலிக்கவில்லை

உண்ண உணவில்லை
உதவுவார் எவருமில்லை

என் பிள்ளை உயிரோடில்லை
ஏனெனக்கேட்க யாருமில்லை

இல்லாளும் இங்கில்லை
இறையும் விழிக்கவில்லை

ஊர்போக வழியில்லை
ஊமை வாய்திறக்க துணிவில்லை

போர் முடிந்த பின்னும்
போர்ரணவலிகள் மாறவில்லை

-வன்னியூர் செந்தூரன்-


கொதிக்கும் நிழல்

பறந்த சருகில்
கருகிய காயமாம்
இறந்த உணர்வில்
பறந்த இரத்தக்கறையாம்


குமட்டியபடி குழந்தை
குதம்வழியே கூர்வாள்
பதமாக்கிய பட்டாளம்
குமரியின் குலமறுத்தவோலம்

நரம்பு கிழிந்த பறவை
நவரசநாட்டிய இயலாமை
தவமாகிக்காட்டிய தராசின்
சவக்கால ஆராதனைப்பசி

சித்தம் கலங்கிய சத்தத்தின்
முற்றுமறிந்த வித்தகநிலை
பத்தும் மறந்த கதையறியாது
வித்தாகிப் போயாக முடியாதே
-வன்னியூர் செந்தூரன்-

Tuesday, March 28, 2017

மாறுமா..? மீறுமா..?

பரந்த தேசமது புலருமோ- இடி
விழுந்த பாலையில் ஈரமூறுமோ
தறியிழந்த கதிரையில் கனதியோ- முடி
நரைத்த மூளைக்கு முடிதகுமோ

அரசியல் அத்திவாரம் ஆகமமோ
கரகாட்டக்கதையில் தெருக்கூத்தோ
களமோடுகாலங்கள் கானலிலோ
வளமோடு வாழ்ந்ததை மறந்தீரோ

பலமோடு மேதாவம் தாண்டவமோ
கலியோடு மேலாண்மை ஆண்டிடவோ
பலகாலம் வலியோடி நிமிர்ந்தமரம்
சலசலப்பில் சிரமென்றும்சாய்ந்திடாதே...

-------வன்னியூர் செந்தூரன்-----


இனியும் துயரமே

கறுப்பாடை உடுத்த
செவ்வீதி மேனி
வெறுப்பாடை தரித்த
நெறுப்பாற்றுக்காணி

திமிரான மிடுக்கு
தலைசாயக்கூடாதே
திடமான கனவு

ஒருநாளும் சாயாதே
அரசியல் அம்பலத்தில்
சிரசுகளின் அரங்கம்
பழசுகளின் நாமத்தினால்
பாவிகளின் பித்தலாட்டம்

கனவுகளைத்தொலைத்த
நிலவின் துண்டங்களை
அலசுதாமே அரசின்
ஆராட்சி மணிகள்

பிறைகளின் பின்னே
மறைந்த நெருப்புக்களை
செருப்புகள் தெருவில்
நகைக்குதாமே சரியா..?

-வன்னியூர் செந்தூரன்-


அம்மா

என் பிரபஞ்சத்தில்
தூங்காத சூரியக்கீற்று
ஓசோனாய் அமைந்தாள்
ஒட்சிசனும் தந்தாள்


வானவில்லின் வளைவில்
வீணடித்த நேரத்தில்
நான் மறந்தபோதிலும்
மாறாத மகாவெளிச்சம்


சிவப்பிழந்த அவள்
வளைநுதலில் சில
சுருக்கு வந்தபோதும்
வெளுப்பிழக்காத தங்கம்


வறுமை வாட்டத்திலும்
வளத்தின் நீட்டத்திலும்
வளையாத நெடுஞ்சாலை
வற்றாத பாசச்சமுத்திரம்


மற்றவரெல்லாம் மகனை
வித்தகனென்ற போதும்
கெட்டவனென்ற போதும்
கொட்டமடிக்காத குற்றாலம்


மனிதம்செத்த வெளியெங்கும்
மரணிக்குதம்மா உணர்வுநொடி
மிச்சமான கடன்தீர்க்க தாயே
மீண்டுமென்னோடு பிறவியெடு

-வன்னியூர் செந்தூரன்-



கறுப்புக்கண்ணாடிகளுக்கு

கறுப்புக்கண்ணாடிகளுக்கு முன்னே– புது
கவர்ச்சி நாகரீகம் தெரிவது உண்மை
கனமான சோகங்களின் ஆதங்கவிழியது– தன்
கண்ணீரை மறைப்பது தெரியாத உண்மை

– வன்னியூர் செந்தூரன்–



எப்படி உங்களால் மறக்க முடிந்தது ?

மணலாற்றால் போகையிலே
வெலியோயா என்கிறார்கள்
வெஞ்சினம் வெடிக்குது நெஞ்சிலே
கொஞ்சமும் கூசவில்லையாடா குலத்தமிழா?


கானக கரிசலூடே என் கண்பார்ப்பது
கடந்தகாலக் காட்சிகளை மட்டுமே
கொக்குத்தொடுவாய் என்றதுமே
கொற்றவன் லீமாவே தட்டுவான் மனதை


ஒட்டுசுட்டான் சந்தியை கடக்கிறாயே
ராகவனை நினைவிருக்கா ஆதிக்குடியே
புளியங்குளத்தில் இன்று அன்புமில்லை
மாங்குளத்து போர்க் கும் காணாமல் போனான்


இரணைப்பாலைச் செந்தூரன் அழிக்கப்பட்டானாம்
இரணைமடுமாலதிஇரவோடிரவாய் இடிக்கப்பட்டாள்.
கிளிநொச்சி சந்திரன் நொருக்கப்பட்டானாம்.
பரந்தன் சந்தியில் இன்று பெற்றோல் நிலையமாம்.


ஆனையிறவில் யாரோ ஒருவனுக்கு தூபியாமே
தென்னிலங்கைக் கூட்டம் கோயில் கட்டும் திட்டமோ.?
கற்சிலைமடு பண்டாரவன்னியனோ கற்தூளாகினான்
தலை மட்டும் பத்திரமாய் என்னிடமுள்ளது.


முகமாலைப் பனைகளைக் கேள் ஒருநிமிடம்
தீபனின் தீரத்தால் விளைந்தோம் என்று கூறும்
அரசியல் மேதாவிகள் அவசியம் படிக்கவேண்டியது
புன்னகைத் தமிழன் சு.ப. வின் சூட்சுமங்களை..


பேரூந்தில் ஏறியமர்ந்தேன் ஐயோ கடவுளே
வேற்றுமொழி பாடலிட்டால் பெருமையோ
இறங்குமிடம் வந்தது நிறுத்து என்றேன்.
ஹரிஹரி என்று உறுமினான் தமிழ் நடத்துனர்.


எட்டாண்டுகள் எப்படிக் கடந்ததோ இறைவா
எப்படியெல்லாம் மாறிவிட்டது கனவுதேசம்
கொடி பிடிக்கும் கோடாரிப் பாம்புகளின் காலமிது
விடை தெரியாப்புதிராக ஓடும் சிலரோ விரக்தியிலே


அழிந்தோம் சிதைந்தோம் அதைப்பற்றி என்ன
அரச உத்தியோகம் அவசியம் வேண்டுமப்பா
அறப்படித்த கூழ்ப்பானைகளே நீங்கள்
ஆபத்தானவர்கள் உங்கள் கல்விகூட சுயநலமே


ஆனால் ஒன்றை உறுதிபடச் சொல்கிறேன்–நாளை
என் பிள்ளைக்கு நாம் இழந்தவற்றை தான் சொல்வேன்.
என்னை விட வீச்சாக வேண்டும் தமிழ்ப்பற்றுடன்
கல்வி என்பது எம் வரலாறு தந்த பாடம் தானே.
~வன்னியூர் செந்தூரன்~



" சூரியனைத் தொலைத்த தமிழ்"

பண்டைய தமிழ் வாழும்
பாரம்பரியத் தீவிலே
பள்ளி மாணவியின் 
படு கொலையாம்
பாலியல் வன்புணர்வோடு ....
பதறுது எம் நெஞ்சம்
கதறுது ஊமை விழிகள்
தோட்டக்காரன் இல்லை
கேட்க யாருமில்லை என
கேளிக்கை வேடர்களும்
அம்மணக் காட்டேறிகளும்
பூமரங்களை மட்டுமல்ல
மொட்டுக்களையும் சிதைக்க
திட்டமிட்டு அலைகிறாரோ ?
கிருசாந்தி முதல்
முள்ளிவாய்க்கால் தொட்டு
வித்தியா வரை இன்று
எம் இன மாதுக்களின்
மானத்தை பறிப்பது
மரபாகிப் போனதோ ?
மானம் கோர்த்தெடுத்த தமிழ்
கவரிமான் வம்சத்து மாணிக்கங்களே !
பெண்ணியத்தை கெடுக்கும்
கண்கெட்ட கயவர்கள்
கதை முடிக்க வேண்டுமடி
கையில் எடு கவசத்தை ..
கருவறுப்போம் ...
காட்டேறிகள் கதை முடிப்போம்
தமிழ் இறைவனே ...! நீ எங்கே ?
தமிழர்களை ஆண்டவன் தான்
காக்க வேண்டும் மீண்டும் ....
..........." வன்னியூர் செந்தூரன் ".........


முள்ளிவாய்க்கால் மண்ணே

முல்லைநிலத்துத்தென்றலே
மௌனத்தை மறியலிடாதே
வல்லவீரத்து வளர்பிறைக்கடலே
மெல்லநீயும் சோர்ந்துபோகாதே

தசையுண்ணும் வசையோடு
பசித்திருக்கிறாயா ஈழமண்ணே
படுத்திருக்கும் உன்பிள்ளைகளைப்பார்
பஞ்சுமெத்தையல்ல பாடையம்மா

தேகமெரித்த தீரருடலில் அமிலத்தின்
தாகத்தடங்களைத் தடவிப் பாரம்மா
மானம் காத்த மறத்தியவள் மார்பை
வீணர்படை கறிசமைக்கிறார் ஏனம்மா

நந்திக்கடல் நீராடும் வெண்கொக்கே
முந்தையரின் பூர்வீகம் அழியும்கதையை
முத்தையன்கட்டு விராலின் காதிலோது
இனியாவது விராலோடு விலகாதிரு

மண்டியிடாதவீரம் மண்ணாகினாலும்
மறவர்குழலின் சீற்றம் தணியாதம்மா
திம்பிலிப்பற்றைக்குள் பல தியாகங்கள்
திருடப்பட்டு மறைக்கப்படும் நாளை

புகைமண்டலங்களை சுவரிட்டிருக்கும்
வட்டுவாகல் வானமே நீயறிவாயா
கொத்துக்கொத்தாய் குழவிகள்
கத்தியழியும் கொடூரத்தின் அரங்கத்தை

அனுதாபக்கிறுக்கல்கள் நாளை
அரங்கேறும் சபையெங்கும் அறிவோம்
அர்த்தமற்ற பேச்சுக்களால் இனத்தை
அழிப்பார் எதிரியின் பீடைகள் கவனம்

எங்களின் மரணத்தின் மேலாவது
வலுப்பெறட்டும் மறைக்கப்பட்டதேசம்
ஊனத்தைத்தின்றாவது ஞாலம்
ஈகத்தில் எழும்ஈழம் மலர்ச்சி பெறட்டும்


-வன்னியூர் செந்தூரன்-



சிம்மசொப்பனவீரன்

வன்னியின் வீரமகன்
வரலாறான துக்ககாலம்
கானகக்கரைகளின் காவல்
கனலில் களம் கண்ட லீமா


மணலாறு முதல் ஆனையிறவு குடாரப்பு
முல்லைக்கோட்டை முதல் மன்னார் என
மன்னனின் பாதமறியாப் போர்க்களங்களுண்டோ
மருண்டோடாத மூர்க்கப் படைகளுமுண்டோ


பால்ராஜ்அண்ணா ஒரு தனிச்சரித்திரம்
ஈழத்தமிழ் போராட்டக்காவியத்தில்
மற்றைய தளபதிகளிலிருந்து சற்று வேறுபட்டவர்
மரணத்தை முன்னிலையில் ஏற்கத்துணிந்த மறவன்


முல்லைநிலத்தின் மைந்தன் வீழ்ந்ததுமே
வன்னியினெல்லை வற்றத்தொடங்கியதுண்மை
மாரடைப்பில் மௌனிக்காவிட்டால்
முள்ளிவாய்க்காலும் பகைக்கு கனவே என்றும்..

–வன்னியூர் செந்தூரன்–




மூன்றாம் விதி நடக்கும்

தண்ணீரில் கண்ணீர்கரையும்
காலம் கங்கணமிட்டிருக்கும்
செங்குருதி சிதைந்தோடும்
வெஞ்சினவேளை விரையும்


துரோகத்தின் கொடுமையை
விரோதத்தின் வெப்பியாரத்தை
புத்தனின் தேசப்பித்தர்களும்
புத்தியிலேற்றும் நாள்வரும்


ஈழத்தின் புனிதத்தை கலைத்த
அத்தனை வல்லரசுப் போர்முனையும்
முற்றுகை முகாமிட்டழிக்கும் ஒருநாள்
புத்தனின் போதிமரத்தோடு தேசத்தையும்


உடல்கருகி ஊண்சிதைந்து
கடல்தாண்டி அலை கொதிக்க
உணவளித்து ஆறுதலுரைப்பார்
எல்லாளன் வம்சத்துப்பிள்ளைகள்


முள்ளிவாய்க்காலின் எதிர்த்தாக்கம்
கட்டாயம் நடக்கும் தென்புலத்தில்
துட்டகாமினியின் குடிகளையும் காக்கும்
தூயசோழவீர வேங்கைக்கொடி அன்று
-வன்னியூர் செந்தூரன்-


இதயம் உருகும் உணர்வே உனக்காக..

இரு ஒளிவண்டு விழிகள்
உருண்டோடிக்கொண்டிருக்கிறது
என் உலகமுமல்லவா அதில்
சுழன்றாடிக்கொண்டிருக்கிறது


வானவில்லின் வடிவிலே
வரைந்து வைத்த
கண்ணின் காப்பரண்

தங்கக்கன்னங்களில்
ததும்பும் சிறுகுறும்பலைகள்
படர்ந்தனவோ என்
பார்வை பட்டு..

வெண்பனி முத்துக்களூடே
வெளிவரமுயலும் புன்னகை
வேலியாய் தடுக்குது
ரோஜாப்பூந்தோட்டம்

பொன்னைத்தாங்கியபடி
பொன் நிறத்தில் சிறுகழுத்து
ஆடையுடன் போட்டியிட்டு
போதைதரும் பேதையின் முன்னழகு

துள்ளிடும் இவள் துடியிடையில்
துவளுது என் இளவயது
சொன்னபடி அமைந்தது போல்
சொக்கவைக்கும் பின்னழகு

வண்ணமடி இவள் அழகு
வசந்தஅழைப்புவிடும் தொடையழகு
பின்னிடுமிரு காலழகு
பிறங்கால் நற்சிவப்பழகு

சொர்க்கத்தைத் தேடிய எனக்கு
சொல்லவில்லையே ஒருவரும் இந்த
செவ்விதழின் சேதி பற்றி...

என்வீட்டுச்சுவரில்
மாட்டியிருந்த மோனலிசா
ஓய்வுபெற்று குப்பைக்குள்
ஒளிந்து கொண்டாள்
நான் இவளைப் பார்த்ததை அறிந்து

–வன்னியூர் செந்தூரன்–


"மடிந்த மனிதம் "

கரையைத் தேடிய
கட்டுமரங்கள் ..
மனிதத்தோடு வாழ்ந்த 
மறத்தமிழர்கள் ...
சுடுகுழல் பிசாசுகளுடன்
மன்றாடி மடிந்த நாட்கள்
பதவித்திரைகள்
பலமாய் மாற
பாவியுயிர்கள் பல
நிர்வாணக்கோலத்தில்
மாறிய தேசம்
மானத்தையிழந்து
மடிந்து விட்டபின்னும்
காணொளியில் எம்படங்கள்
விவாத அரங்கம் உலகில்
காலம் கடந்துவிட்ட பின் ....
மரணபூமியின் தீயில்
மண்ணோடு போன எம்
மாணிக்க மனங்களை
நினைக்கையில் தீயாய்
எம்மனம் கொதிக்குதம்மா.....
அதை மறக்க நினைக்கையில்
எம்முயிர் வலிக்குதம்மா .....

................."வன்னியூர் செந்தூரன் "........



தீயைத்தின்பவனின் குளிர்மை

குயில்களின் மொழிகளில்
மனம்மகிழ்வதில்லை இப்போது


மயில்களின் பரதங்களில்
மதிமயங்குவதில்லை இப்போது


மான்களின் மேனிவளைவுகளில்
மருண்டலைவதுமில்லை இப்போது


கயல்களின் கண்சிமிட்டல்களில்
காரியத்தைத்தொலைப்பதில்லை இப்போது


சுற்றியடிக்கும் சருகுக்காற்றுக்களுக்கு
சிரம்சரிந்துபோவதுமில்லை இப்போது


பற்றியெரியும் அக்கினிச்சுவாலையிலும்
பாதம் பதட்டம்கொள்ளாது இப்போது


உடலெரிக்கும் மின்சாரத்தையும் தாங்க
உறுதியெடுத்துவிட்டன நரம்புநார்கள் இப்போது


வடம்முறுக்கி தடம்பதித்து அடித்தாலும்
வளையாதிருக்கப்பழகிவிட்டன தசைகள் இப்போது


ஆனால் அத்தனை தாக்கமும்
உன்னைத்தாக்கினால் மட்டுமே
என் பிரபஞ்சம் நிலையிழந்துபோகும்

-வன்னியூர் செந்தூரன்–


செங்கொடி சீறும்

மயானங்கள் ஆர்ப்பரிக்கின்றன
தியாகங்கள் திருடப்படுவதால்
எலும்புக்கூடுகளும் இரும்பேந்தலாம்
வலுக்பெற்றகோரம் அரங்கேறலாம்


அல்பிரட் துரையப்பா மட்டுமல்ல
கதிர்காமர் வரை முளைத்துவிட்டனர்
களையெடுப்பு மீண்டும் வருமென
பலியெடுப்பு பத்திரங்கள் செல்கிறதாம்

ஐம்பூதங்களும் ஆத்திரத்தில்
அழிக்கலாம் புத்தசாசனத்தை
மகாவம்சமும் மண்ணோடுசேர
மலைபோல வாய்ப்புள்ளதாக ஐதீகம்

சோழக்கொடி மீண்டும் சிவந்தாடுமென
செண்பகங்கள் சிலிர்த்துச்சிரிக்குமென
அம்பகாமத்தில் விமானங்கள் இறங்குமென
அம்பாந்தோட்டை கள்வனுக்கு நடுக்கமாம்

எது எப்படியோ அது நிகழும் ஒருநாள்
சக்கரச்சுழற்சியில் வீழ்வின் பின் எழுகைதானே
ஆண்டகொடி மீளாமல் அழியாது ஈழபூமி
அகிலத்தின் சுழற்சியே அர்த்தப்படும் இதற்கு

– வன்னியூர் செந்தூரன்–



காடு– நாடு– வீடு– சூடு– மீண்டும் ?

தந்திரமறியாத நரிகளான
தமிழ் அரசியல்வாதிகளின்
தரமற்ற பிரவேசம் தான்
இனத்திற்கு கொள்ளி நெருப்பு


அண்ணனின் தூரநோக்கையும்
அடியோடு அழித்த உத்தமர்கள்
பணியாரம் தின்னும் ஆசையில்
பல்லையே விலை கொடுத்தவர்கள்

அடிக்கடி உறுமும் ஊடகவிரும்பிகள்
அகரமே தெரியாத அரசியல் ஞானிகள்
நாயின் குதத்தில் தேனிந்தால்
யாருக்கு என்ன பயன் என்பது இவர்களுக்கோ..

மக்களை ஏமாற்றிப்பழகிய மறவர்கள்
கொள்கையே இல்லாத குறவர்கள்
அனுதாபத்தையும் தமிழன் அடையவிடாத
அஞ்சாதபரதேசிகள் அரைகுறைக்கிழடுகள்

முள்ளிவாய்க்காலில் தமிழன் வீழ்கையில்–இந்த
முடிநரைத்தவன் சாப்பிடாமல் கிடந்தானா– இல்லை
வெள்ளைத்துணி விரித்து தாண்டிக்குளத்தில்
சாவையெதிர்த்து கடுந்தவமிருந்தானா..?

போராட்டத்தையே கருவறுத்த யானைகளோடு
பேரம்பசிப்பதவி வாங்கி போடியார் என்ன கிழிச்சார்?
போர்க்குற்றத்தளத்தையும் கூறாக்க உதவிவிட்டார்
நம்மவர் வேள்வியிலே கொழும்பில் நக்கித்திரிகிறார்

வழக்கறிஞர் மேதையொன்று ஆர்வக்கோளாறு
விளக்குவைத்த இடமெல்லாம் பல்லைக்காட்டும்
வித்துவான் தானென்று வில்லங்கம் பேசும்
புலத்தில் கோவலப்பட்டும் புத்திவரவில்லை இன்னும்

தேவரான தேவரெல்லாம் தேத்தண்ணிக்கு அலைய
தேவாங்கு தேன்போத்தல் கேட்டதாம் என்பதுபோல
மைத்திரி வந்தால் தான் மகளுக்கு கொண்டாட்டம்
மைனர் ஒருத்தரின் தமிழ்த்தேசியப்பிடிவாதம் யாழில்

எல்லா உள்ளங்களையும் குறைகூற வரவில்லை
நல்லபயிர்களும் நாலைந்து இடையிலுண்டு
பீடைகள் களையப்பட்டால் வீச்சாகும் பயிர்கள்
இனங்காண வேண்டியது எம்மவரின் விரல் ரேகைகள்

~~~~~~ வன்னியூர் செந்தூரன்~~~~~

அமரரான அப்பாவுக்காக துயரத்தோடு சிலவரிகள்

ஈழமண்ணில் பெருக்கெடுத்த
இரத்தஆற்றில் உன் செங்குருதியும்
சூடாக்கிக்கொதித்ததை இன்று அறிவேன்..
பதினாறு வருடங்களின் முன்
பாலகனான எனக்கு உன் மறைவின்
பாதிப்பின் பக்கவினை ஏதும் தெரியவில்லை..


மன்னார் மண்ணை இன்றும்
நெஞ்சில் நினைப்பேன் அடிக்கடி
உன்மூச்சுநின்ற பூமியென்பதால்...
மரணச்சடங்கே செய்யாத உன்கூடு
புதைகுழி ஒன்றில் மறைக்கப்பட்டிருக்கும்..
வன்னிமண்ணுக்கு வழமையான சாபமிது

வயதுவந்து நோய்துரத்தி நீ மாண்டிருந்தால்
வலிஏதும் வருத்தியிருக்காது மனதை..
இளவயதில் அம்மாவின் கனவுகளையுமல்லவா
கரைத்துவிட்டு கவலையின்றி கலைந்துபோனாய்.
கடைக்குட்டித்தங்கைக்கு உன்முகமே தெரியாது
அப்பனைத்தின்றவளென அயலாரின் சொல்கேட்டாள்..

சுட்டுப்போட்ட வெற்றுடலைக்கூடத்தராத
கேடுகெட்டசிங்களவனை மன்னிப்பேனா என்றும். ?
இனத்துவேசவாதியென பட்டம் பெற்றேன்
படிக்கப்போன பல்கலைக்கழகம் முதலீறாய்...
அடிகொடுக்க என் பேனாமுனையும் இன்று
ஆக்குரோசமாய் பயிற்றப்பட்டுவிட்டது உண்மை.

மூத்தவன் எனக்கு குடும்பச்சுமையை
முதுகிலேற்றிவிட்டுப்போய்விட்டீர்..
வலிகளோடு மகிழும் வலிமையைத்தந்ததும்
வாழ்க்கையின் பள்ளங்களில் மீண்டுவரச்செய்ததும்
சமுதாயம் கற்பித்த இலவசப்பாடங்கள் தான்.. 

சரிவுகளிலும் இன்றும் சட்டக்கம்பியாய் நிற்கிறது
இருந்தாலும் ஒரு உறுத்தல் எனக்குண்டு..
நான் மருத்துவனாக வேண்டுமென விரும்பியதாக
அம்மா சொல்லித்தான் அறிந்தேன்
அதற்காகவே விஞ்ஞானம் கற்றேன் .
பல்கலைக்கழகம் செல்லமுடிந்ததே தவிர
உங்கள் கனவை மெய்ப்பிக்க இயலவில்லை.
மன்னிக்க வேண்டுகிறேன்.
காலத்தின் சுழற்சியில் உங்கள் ஆத்மா
கருக்கொள்ளும் இன்னொரு தமிழுடலில்
நம்பிக்கையோடு நகர்கிறேன் துதித்தபடி..


–வன்னியூர் செந்தூரன்–