Wednesday, March 29, 2017

தீப்பொறிகளையும் பாரும்

உரப்பைச்சுவரும்
தேக்கங்கம்பியும்
தந்தவலிய தரையக
காவல் வீட்டில்
மெழுகுதிரிச்சிரசுகள்
உருகும் விடியும்வரை
தேச ஒளிக்காய்

அக்கம்பக்கமெல்லாம்
மிருகங்களின் குடிமனை
அப்பப்போ பெய்யும்
அமிலமழையும் வேறு
இரும்புத்துருக்கற்றும்
எமையணைக்கலாம்
சொல் என் தோழி
உன் கனவு எது ..?
கேட்டது ஒரு நெருப்பு

சொட்டும் சங்கீதத்தில்
தட்டும் தாளத்திற்கு
மெட்டுப்போடும்
சலங்கைக் காலொன்று
சரிந்ததால் நான்
ஒற்றைக்காலில்..
அன்னைதேசம் ஒளிகாணவென்
ஆவியை உருக்குவேன்
ஆசை இது தான்..

பலகாலம் வாழ்ந்திங்கு
பயனேதுமுண்டோ
பாரென் தோழி
சிலகாலம் வாழ்ந்தாலும்
சீர்தூக்கிப் புகழ்சூடி
உயிர்வாழும் வரலாற்றில்
பதிவேனே நிலையாகி..
தீவிழி உரைத்தாள்
மின்னல் புன்னகையுடன்..

மருதாணி முத்தமிட்ட
மங்கையின் மடலில்
எழுத்தாணி தவழ்ந்த
விரல்நுனித் திடலில்
உரிமையோடு ஒரு
உயிருண்ணும் இரும்பு
ஒட்டிக்கொண்ட மர்மமென்ன..?

––––––––––வன்னியூர் செந்தூரன்–––––


நம்பிக்கை அதிகாரத்தில்

நம்பிக்கை அதிகாரத்தில்
நலிந்தே போகும் நாட்கள்

வெந்துபோன காயங்களில்
தந்திர மருந்தாகும் மாயங்கள்

ஈரமான தேகத்தின் இடுக்குகளை
இடுகாடுகள் முற்றுகையிடுகின்றன

கைதியின் சாசனங்கள் என்றும்
கம்பிக்கதவைத் தாண்டாது போல

கரிசல்களின் கரிசனை கூட
கருவேப்பாய் வாழ்ந்திருக்கும்

வன்னியூர் செந்தூரன்


"இல்லை"

காலில் செருப்பில்லை
கனல் வெயிலுறங்கவில்லை

பையில் பணமில்லை
பரிகசிப்பார் யாருமில்லை

கற்களும் முட்களும்
காலை வருத்தவில்லை

பாறைகள் மோதினாலும்
பாதத்திற்கு வலிக்கவில்லை

உண்ண உணவில்லை
உதவுவார் எவருமில்லை

என் பிள்ளை உயிரோடில்லை
ஏனெனக்கேட்க யாருமில்லை

இல்லாளும் இங்கில்லை
இறையும் விழிக்கவில்லை

ஊர்போக வழியில்லை
ஊமை வாய்திறக்க துணிவில்லை

போர் முடிந்த பின்னும்
போர்ரணவலிகள் மாறவில்லை

-வன்னியூர் செந்தூரன்-


கொதிக்கும் நிழல்

பறந்த சருகில்
கருகிய காயமாம்
இறந்த உணர்வில்
பறந்த இரத்தக்கறையாம்


குமட்டியபடி குழந்தை
குதம்வழியே கூர்வாள்
பதமாக்கிய பட்டாளம்
குமரியின் குலமறுத்தவோலம்

நரம்பு கிழிந்த பறவை
நவரசநாட்டிய இயலாமை
தவமாகிக்காட்டிய தராசின்
சவக்கால ஆராதனைப்பசி

சித்தம் கலங்கிய சத்தத்தின்
முற்றுமறிந்த வித்தகநிலை
பத்தும் மறந்த கதையறியாது
வித்தாகிப் போயாக முடியாதே
-வன்னியூர் செந்தூரன்-

Tuesday, March 28, 2017

மாறுமா..? மீறுமா..?

பரந்த தேசமது புலருமோ- இடி
விழுந்த பாலையில் ஈரமூறுமோ
தறியிழந்த கதிரையில் கனதியோ- முடி
நரைத்த மூளைக்கு முடிதகுமோ

அரசியல் அத்திவாரம் ஆகமமோ
கரகாட்டக்கதையில் தெருக்கூத்தோ
களமோடுகாலங்கள் கானலிலோ
வளமோடு வாழ்ந்ததை மறந்தீரோ

பலமோடு மேதாவம் தாண்டவமோ
கலியோடு மேலாண்மை ஆண்டிடவோ
பலகாலம் வலியோடி நிமிர்ந்தமரம்
சலசலப்பில் சிரமென்றும்சாய்ந்திடாதே...

-------வன்னியூர் செந்தூரன்-----


இனியும் துயரமே

கறுப்பாடை உடுத்த
செவ்வீதி மேனி
வெறுப்பாடை தரித்த
நெறுப்பாற்றுக்காணி

திமிரான மிடுக்கு
தலைசாயக்கூடாதே
திடமான கனவு

ஒருநாளும் சாயாதே
அரசியல் அம்பலத்தில்
சிரசுகளின் அரங்கம்
பழசுகளின் நாமத்தினால்
பாவிகளின் பித்தலாட்டம்

கனவுகளைத்தொலைத்த
நிலவின் துண்டங்களை
அலசுதாமே அரசின்
ஆராட்சி மணிகள்

பிறைகளின் பின்னே
மறைந்த நெருப்புக்களை
செருப்புகள் தெருவில்
நகைக்குதாமே சரியா..?

-வன்னியூர் செந்தூரன்-


அம்மா

என் பிரபஞ்சத்தில்
தூங்காத சூரியக்கீற்று
ஓசோனாய் அமைந்தாள்
ஒட்சிசனும் தந்தாள்


வானவில்லின் வளைவில்
வீணடித்த நேரத்தில்
நான் மறந்தபோதிலும்
மாறாத மகாவெளிச்சம்


சிவப்பிழந்த அவள்
வளைநுதலில் சில
சுருக்கு வந்தபோதும்
வெளுப்பிழக்காத தங்கம்


வறுமை வாட்டத்திலும்
வளத்தின் நீட்டத்திலும்
வளையாத நெடுஞ்சாலை
வற்றாத பாசச்சமுத்திரம்


மற்றவரெல்லாம் மகனை
வித்தகனென்ற போதும்
கெட்டவனென்ற போதும்
கொட்டமடிக்காத குற்றாலம்


மனிதம்செத்த வெளியெங்கும்
மரணிக்குதம்மா உணர்வுநொடி
மிச்சமான கடன்தீர்க்க தாயே
மீண்டுமென்னோடு பிறவியெடு

-வன்னியூர் செந்தூரன்-



கறுப்புக்கண்ணாடிகளுக்கு

கறுப்புக்கண்ணாடிகளுக்கு முன்னே– புது
கவர்ச்சி நாகரீகம் தெரிவது உண்மை
கனமான சோகங்களின் ஆதங்கவிழியது– தன்
கண்ணீரை மறைப்பது தெரியாத உண்மை

– வன்னியூர் செந்தூரன்–



எப்படி உங்களால் மறக்க முடிந்தது ?

மணலாற்றால் போகையிலே
வெலியோயா என்கிறார்கள்
வெஞ்சினம் வெடிக்குது நெஞ்சிலே
கொஞ்சமும் கூசவில்லையாடா குலத்தமிழா?


கானக கரிசலூடே என் கண்பார்ப்பது
கடந்தகாலக் காட்சிகளை மட்டுமே
கொக்குத்தொடுவாய் என்றதுமே
கொற்றவன் லீமாவே தட்டுவான் மனதை


ஒட்டுசுட்டான் சந்தியை கடக்கிறாயே
ராகவனை நினைவிருக்கா ஆதிக்குடியே
புளியங்குளத்தில் இன்று அன்புமில்லை
மாங்குளத்து போர்க் கும் காணாமல் போனான்


இரணைப்பாலைச் செந்தூரன் அழிக்கப்பட்டானாம்
இரணைமடுமாலதிஇரவோடிரவாய் இடிக்கப்பட்டாள்.
கிளிநொச்சி சந்திரன் நொருக்கப்பட்டானாம்.
பரந்தன் சந்தியில் இன்று பெற்றோல் நிலையமாம்.


ஆனையிறவில் யாரோ ஒருவனுக்கு தூபியாமே
தென்னிலங்கைக் கூட்டம் கோயில் கட்டும் திட்டமோ.?
கற்சிலைமடு பண்டாரவன்னியனோ கற்தூளாகினான்
தலை மட்டும் பத்திரமாய் என்னிடமுள்ளது.


முகமாலைப் பனைகளைக் கேள் ஒருநிமிடம்
தீபனின் தீரத்தால் விளைந்தோம் என்று கூறும்
அரசியல் மேதாவிகள் அவசியம் படிக்கவேண்டியது
புன்னகைத் தமிழன் சு.ப. வின் சூட்சுமங்களை..


பேரூந்தில் ஏறியமர்ந்தேன் ஐயோ கடவுளே
வேற்றுமொழி பாடலிட்டால் பெருமையோ
இறங்குமிடம் வந்தது நிறுத்து என்றேன்.
ஹரிஹரி என்று உறுமினான் தமிழ் நடத்துனர்.


எட்டாண்டுகள் எப்படிக் கடந்ததோ இறைவா
எப்படியெல்லாம் மாறிவிட்டது கனவுதேசம்
கொடி பிடிக்கும் கோடாரிப் பாம்புகளின் காலமிது
விடை தெரியாப்புதிராக ஓடும் சிலரோ விரக்தியிலே


அழிந்தோம் சிதைந்தோம் அதைப்பற்றி என்ன
அரச உத்தியோகம் அவசியம் வேண்டுமப்பா
அறப்படித்த கூழ்ப்பானைகளே நீங்கள்
ஆபத்தானவர்கள் உங்கள் கல்விகூட சுயநலமே


ஆனால் ஒன்றை உறுதிபடச் சொல்கிறேன்–நாளை
என் பிள்ளைக்கு நாம் இழந்தவற்றை தான் சொல்வேன்.
என்னை விட வீச்சாக வேண்டும் தமிழ்ப்பற்றுடன்
கல்வி என்பது எம் வரலாறு தந்த பாடம் தானே.
~வன்னியூர் செந்தூரன்~



" சூரியனைத் தொலைத்த தமிழ்"

பண்டைய தமிழ் வாழும்
பாரம்பரியத் தீவிலே
பள்ளி மாணவியின் 
படு கொலையாம்
பாலியல் வன்புணர்வோடு ....
பதறுது எம் நெஞ்சம்
கதறுது ஊமை விழிகள்
தோட்டக்காரன் இல்லை
கேட்க யாருமில்லை என
கேளிக்கை வேடர்களும்
அம்மணக் காட்டேறிகளும்
பூமரங்களை மட்டுமல்ல
மொட்டுக்களையும் சிதைக்க
திட்டமிட்டு அலைகிறாரோ ?
கிருசாந்தி முதல்
முள்ளிவாய்க்கால் தொட்டு
வித்தியா வரை இன்று
எம் இன மாதுக்களின்
மானத்தை பறிப்பது
மரபாகிப் போனதோ ?
மானம் கோர்த்தெடுத்த தமிழ்
கவரிமான் வம்சத்து மாணிக்கங்களே !
பெண்ணியத்தை கெடுக்கும்
கண்கெட்ட கயவர்கள்
கதை முடிக்க வேண்டுமடி
கையில் எடு கவசத்தை ..
கருவறுப்போம் ...
காட்டேறிகள் கதை முடிப்போம்
தமிழ் இறைவனே ...! நீ எங்கே ?
தமிழர்களை ஆண்டவன் தான்
காக்க வேண்டும் மீண்டும் ....
..........." வன்னியூர் செந்தூரன் ".........


முள்ளிவாய்க்கால் மண்ணே

முல்லைநிலத்துத்தென்றலே
மௌனத்தை மறியலிடாதே
வல்லவீரத்து வளர்பிறைக்கடலே
மெல்லநீயும் சோர்ந்துபோகாதே

தசையுண்ணும் வசையோடு
பசித்திருக்கிறாயா ஈழமண்ணே
படுத்திருக்கும் உன்பிள்ளைகளைப்பார்
பஞ்சுமெத்தையல்ல பாடையம்மா

தேகமெரித்த தீரருடலில் அமிலத்தின்
தாகத்தடங்களைத் தடவிப் பாரம்மா
மானம் காத்த மறத்தியவள் மார்பை
வீணர்படை கறிசமைக்கிறார் ஏனம்மா

நந்திக்கடல் நீராடும் வெண்கொக்கே
முந்தையரின் பூர்வீகம் அழியும்கதையை
முத்தையன்கட்டு விராலின் காதிலோது
இனியாவது விராலோடு விலகாதிரு

மண்டியிடாதவீரம் மண்ணாகினாலும்
மறவர்குழலின் சீற்றம் தணியாதம்மா
திம்பிலிப்பற்றைக்குள் பல தியாகங்கள்
திருடப்பட்டு மறைக்கப்படும் நாளை

புகைமண்டலங்களை சுவரிட்டிருக்கும்
வட்டுவாகல் வானமே நீயறிவாயா
கொத்துக்கொத்தாய் குழவிகள்
கத்தியழியும் கொடூரத்தின் அரங்கத்தை

அனுதாபக்கிறுக்கல்கள் நாளை
அரங்கேறும் சபையெங்கும் அறிவோம்
அர்த்தமற்ற பேச்சுக்களால் இனத்தை
அழிப்பார் எதிரியின் பீடைகள் கவனம்

எங்களின் மரணத்தின் மேலாவது
வலுப்பெறட்டும் மறைக்கப்பட்டதேசம்
ஊனத்தைத்தின்றாவது ஞாலம்
ஈகத்தில் எழும்ஈழம் மலர்ச்சி பெறட்டும்


-வன்னியூர் செந்தூரன்-



சிம்மசொப்பனவீரன்

வன்னியின் வீரமகன்
வரலாறான துக்ககாலம்
கானகக்கரைகளின் காவல்
கனலில் களம் கண்ட லீமா


மணலாறு முதல் ஆனையிறவு குடாரப்பு
முல்லைக்கோட்டை முதல் மன்னார் என
மன்னனின் பாதமறியாப் போர்க்களங்களுண்டோ
மருண்டோடாத மூர்க்கப் படைகளுமுண்டோ


பால்ராஜ்அண்ணா ஒரு தனிச்சரித்திரம்
ஈழத்தமிழ் போராட்டக்காவியத்தில்
மற்றைய தளபதிகளிலிருந்து சற்று வேறுபட்டவர்
மரணத்தை முன்னிலையில் ஏற்கத்துணிந்த மறவன்


முல்லைநிலத்தின் மைந்தன் வீழ்ந்ததுமே
வன்னியினெல்லை வற்றத்தொடங்கியதுண்மை
மாரடைப்பில் மௌனிக்காவிட்டால்
முள்ளிவாய்க்காலும் பகைக்கு கனவே என்றும்..

–வன்னியூர் செந்தூரன்–




மூன்றாம் விதி நடக்கும்

தண்ணீரில் கண்ணீர்கரையும்
காலம் கங்கணமிட்டிருக்கும்
செங்குருதி சிதைந்தோடும்
வெஞ்சினவேளை விரையும்


துரோகத்தின் கொடுமையை
விரோதத்தின் வெப்பியாரத்தை
புத்தனின் தேசப்பித்தர்களும்
புத்தியிலேற்றும் நாள்வரும்


ஈழத்தின் புனிதத்தை கலைத்த
அத்தனை வல்லரசுப் போர்முனையும்
முற்றுகை முகாமிட்டழிக்கும் ஒருநாள்
புத்தனின் போதிமரத்தோடு தேசத்தையும்


உடல்கருகி ஊண்சிதைந்து
கடல்தாண்டி அலை கொதிக்க
உணவளித்து ஆறுதலுரைப்பார்
எல்லாளன் வம்சத்துப்பிள்ளைகள்


முள்ளிவாய்க்காலின் எதிர்த்தாக்கம்
கட்டாயம் நடக்கும் தென்புலத்தில்
துட்டகாமினியின் குடிகளையும் காக்கும்
தூயசோழவீர வேங்கைக்கொடி அன்று
-வன்னியூர் செந்தூரன்-


இதயம் உருகும் உணர்வே உனக்காக..

இரு ஒளிவண்டு விழிகள்
உருண்டோடிக்கொண்டிருக்கிறது
என் உலகமுமல்லவா அதில்
சுழன்றாடிக்கொண்டிருக்கிறது


வானவில்லின் வடிவிலே
வரைந்து வைத்த
கண்ணின் காப்பரண்

தங்கக்கன்னங்களில்
ததும்பும் சிறுகுறும்பலைகள்
படர்ந்தனவோ என்
பார்வை பட்டு..

வெண்பனி முத்துக்களூடே
வெளிவரமுயலும் புன்னகை
வேலியாய் தடுக்குது
ரோஜாப்பூந்தோட்டம்

பொன்னைத்தாங்கியபடி
பொன் நிறத்தில் சிறுகழுத்து
ஆடையுடன் போட்டியிட்டு
போதைதரும் பேதையின் முன்னழகு

துள்ளிடும் இவள் துடியிடையில்
துவளுது என் இளவயது
சொன்னபடி அமைந்தது போல்
சொக்கவைக்கும் பின்னழகு

வண்ணமடி இவள் அழகு
வசந்தஅழைப்புவிடும் தொடையழகு
பின்னிடுமிரு காலழகு
பிறங்கால் நற்சிவப்பழகு

சொர்க்கத்தைத் தேடிய எனக்கு
சொல்லவில்லையே ஒருவரும் இந்த
செவ்விதழின் சேதி பற்றி...

என்வீட்டுச்சுவரில்
மாட்டியிருந்த மோனலிசா
ஓய்வுபெற்று குப்பைக்குள்
ஒளிந்து கொண்டாள்
நான் இவளைப் பார்த்ததை அறிந்து

–வன்னியூர் செந்தூரன்–


"மடிந்த மனிதம் "

கரையைத் தேடிய
கட்டுமரங்கள் ..
மனிதத்தோடு வாழ்ந்த 
மறத்தமிழர்கள் ...
சுடுகுழல் பிசாசுகளுடன்
மன்றாடி மடிந்த நாட்கள்
பதவித்திரைகள்
பலமாய் மாற
பாவியுயிர்கள் பல
நிர்வாணக்கோலத்தில்
மாறிய தேசம்
மானத்தையிழந்து
மடிந்து விட்டபின்னும்
காணொளியில் எம்படங்கள்
விவாத அரங்கம் உலகில்
காலம் கடந்துவிட்ட பின் ....
மரணபூமியின் தீயில்
மண்ணோடு போன எம்
மாணிக்க மனங்களை
நினைக்கையில் தீயாய்
எம்மனம் கொதிக்குதம்மா.....
அதை மறக்க நினைக்கையில்
எம்முயிர் வலிக்குதம்மா .....

................."வன்னியூர் செந்தூரன் "........



தீயைத்தின்பவனின் குளிர்மை

குயில்களின் மொழிகளில்
மனம்மகிழ்வதில்லை இப்போது


மயில்களின் பரதங்களில்
மதிமயங்குவதில்லை இப்போது


மான்களின் மேனிவளைவுகளில்
மருண்டலைவதுமில்லை இப்போது


கயல்களின் கண்சிமிட்டல்களில்
காரியத்தைத்தொலைப்பதில்லை இப்போது


சுற்றியடிக்கும் சருகுக்காற்றுக்களுக்கு
சிரம்சரிந்துபோவதுமில்லை இப்போது


பற்றியெரியும் அக்கினிச்சுவாலையிலும்
பாதம் பதட்டம்கொள்ளாது இப்போது


உடலெரிக்கும் மின்சாரத்தையும் தாங்க
உறுதியெடுத்துவிட்டன நரம்புநார்கள் இப்போது


வடம்முறுக்கி தடம்பதித்து அடித்தாலும்
வளையாதிருக்கப்பழகிவிட்டன தசைகள் இப்போது


ஆனால் அத்தனை தாக்கமும்
உன்னைத்தாக்கினால் மட்டுமே
என் பிரபஞ்சம் நிலையிழந்துபோகும்

-வன்னியூர் செந்தூரன்–


செங்கொடி சீறும்

மயானங்கள் ஆர்ப்பரிக்கின்றன
தியாகங்கள் திருடப்படுவதால்
எலும்புக்கூடுகளும் இரும்பேந்தலாம்
வலுக்பெற்றகோரம் அரங்கேறலாம்


அல்பிரட் துரையப்பா மட்டுமல்ல
கதிர்காமர் வரை முளைத்துவிட்டனர்
களையெடுப்பு மீண்டும் வருமென
பலியெடுப்பு பத்திரங்கள் செல்கிறதாம்

ஐம்பூதங்களும் ஆத்திரத்தில்
அழிக்கலாம் புத்தசாசனத்தை
மகாவம்சமும் மண்ணோடுசேர
மலைபோல வாய்ப்புள்ளதாக ஐதீகம்

சோழக்கொடி மீண்டும் சிவந்தாடுமென
செண்பகங்கள் சிலிர்த்துச்சிரிக்குமென
அம்பகாமத்தில் விமானங்கள் இறங்குமென
அம்பாந்தோட்டை கள்வனுக்கு நடுக்கமாம்

எது எப்படியோ அது நிகழும் ஒருநாள்
சக்கரச்சுழற்சியில் வீழ்வின் பின் எழுகைதானே
ஆண்டகொடி மீளாமல் அழியாது ஈழபூமி
அகிலத்தின் சுழற்சியே அர்த்தப்படும் இதற்கு

– வன்னியூர் செந்தூரன்–



காடு– நாடு– வீடு– சூடு– மீண்டும் ?

தந்திரமறியாத நரிகளான
தமிழ் அரசியல்வாதிகளின்
தரமற்ற பிரவேசம் தான்
இனத்திற்கு கொள்ளி நெருப்பு


அண்ணனின் தூரநோக்கையும்
அடியோடு அழித்த உத்தமர்கள்
பணியாரம் தின்னும் ஆசையில்
பல்லையே விலை கொடுத்தவர்கள்

அடிக்கடி உறுமும் ஊடகவிரும்பிகள்
அகரமே தெரியாத அரசியல் ஞானிகள்
நாயின் குதத்தில் தேனிந்தால்
யாருக்கு என்ன பயன் என்பது இவர்களுக்கோ..

மக்களை ஏமாற்றிப்பழகிய மறவர்கள்
கொள்கையே இல்லாத குறவர்கள்
அனுதாபத்தையும் தமிழன் அடையவிடாத
அஞ்சாதபரதேசிகள் அரைகுறைக்கிழடுகள்

முள்ளிவாய்க்காலில் தமிழன் வீழ்கையில்–இந்த
முடிநரைத்தவன் சாப்பிடாமல் கிடந்தானா– இல்லை
வெள்ளைத்துணி விரித்து தாண்டிக்குளத்தில்
சாவையெதிர்த்து கடுந்தவமிருந்தானா..?

போராட்டத்தையே கருவறுத்த யானைகளோடு
பேரம்பசிப்பதவி வாங்கி போடியார் என்ன கிழிச்சார்?
போர்க்குற்றத்தளத்தையும் கூறாக்க உதவிவிட்டார்
நம்மவர் வேள்வியிலே கொழும்பில் நக்கித்திரிகிறார்

வழக்கறிஞர் மேதையொன்று ஆர்வக்கோளாறு
விளக்குவைத்த இடமெல்லாம் பல்லைக்காட்டும்
வித்துவான் தானென்று வில்லங்கம் பேசும்
புலத்தில் கோவலப்பட்டும் புத்திவரவில்லை இன்னும்

தேவரான தேவரெல்லாம் தேத்தண்ணிக்கு அலைய
தேவாங்கு தேன்போத்தல் கேட்டதாம் என்பதுபோல
மைத்திரி வந்தால் தான் மகளுக்கு கொண்டாட்டம்
மைனர் ஒருத்தரின் தமிழ்த்தேசியப்பிடிவாதம் யாழில்

எல்லா உள்ளங்களையும் குறைகூற வரவில்லை
நல்லபயிர்களும் நாலைந்து இடையிலுண்டு
பீடைகள் களையப்பட்டால் வீச்சாகும் பயிர்கள்
இனங்காண வேண்டியது எம்மவரின் விரல் ரேகைகள்

~~~~~~ வன்னியூர் செந்தூரன்~~~~~

அமரரான அப்பாவுக்காக துயரத்தோடு சிலவரிகள்

ஈழமண்ணில் பெருக்கெடுத்த
இரத்தஆற்றில் உன் செங்குருதியும்
சூடாக்கிக்கொதித்ததை இன்று அறிவேன்..
பதினாறு வருடங்களின் முன்
பாலகனான எனக்கு உன் மறைவின்
பாதிப்பின் பக்கவினை ஏதும் தெரியவில்லை..


மன்னார் மண்ணை இன்றும்
நெஞ்சில் நினைப்பேன் அடிக்கடி
உன்மூச்சுநின்ற பூமியென்பதால்...
மரணச்சடங்கே செய்யாத உன்கூடு
புதைகுழி ஒன்றில் மறைக்கப்பட்டிருக்கும்..
வன்னிமண்ணுக்கு வழமையான சாபமிது

வயதுவந்து நோய்துரத்தி நீ மாண்டிருந்தால்
வலிஏதும் வருத்தியிருக்காது மனதை..
இளவயதில் அம்மாவின் கனவுகளையுமல்லவா
கரைத்துவிட்டு கவலையின்றி கலைந்துபோனாய்.
கடைக்குட்டித்தங்கைக்கு உன்முகமே தெரியாது
அப்பனைத்தின்றவளென அயலாரின் சொல்கேட்டாள்..

சுட்டுப்போட்ட வெற்றுடலைக்கூடத்தராத
கேடுகெட்டசிங்களவனை மன்னிப்பேனா என்றும். ?
இனத்துவேசவாதியென பட்டம் பெற்றேன்
படிக்கப்போன பல்கலைக்கழகம் முதலீறாய்...
அடிகொடுக்க என் பேனாமுனையும் இன்று
ஆக்குரோசமாய் பயிற்றப்பட்டுவிட்டது உண்மை.

மூத்தவன் எனக்கு குடும்பச்சுமையை
முதுகிலேற்றிவிட்டுப்போய்விட்டீர்..
வலிகளோடு மகிழும் வலிமையைத்தந்ததும்
வாழ்க்கையின் பள்ளங்களில் மீண்டுவரச்செய்ததும்
சமுதாயம் கற்பித்த இலவசப்பாடங்கள் தான்.. 

சரிவுகளிலும் இன்றும் சட்டக்கம்பியாய் நிற்கிறது
இருந்தாலும் ஒரு உறுத்தல் எனக்குண்டு..
நான் மருத்துவனாக வேண்டுமென விரும்பியதாக
அம்மா சொல்லித்தான் அறிந்தேன்
அதற்காகவே விஞ்ஞானம் கற்றேன் .
பல்கலைக்கழகம் செல்லமுடிந்ததே தவிர
உங்கள் கனவை மெய்ப்பிக்க இயலவில்லை.
மன்னிக்க வேண்டுகிறேன்.
காலத்தின் சுழற்சியில் உங்கள் ஆத்மா
கருக்கொள்ளும் இன்னொரு தமிழுடலில்
நம்பிக்கையோடு நகர்கிறேன் துதித்தபடி..


–வன்னியூர் செந்தூரன்–

யாகம்

மழைமேகம் குளிர் பாய்ந்து
பொழிந்திடும் நீள் வானம் .
கலிகாலம் கலைந்திட
கருகிடும் காவியங்கள்
குடிவாழ நிலமின்றி
தவிக்கின்ற இனம்- தன்
குலம்வாழ புடம்போட
நினைக்கின்ற மனம்
வருங்காலம் மரணம் தான்
என்கின்ற போதும் ..
மனச்சோர்வு ஏதுமின்றி
விழிக்கின்ற ஞானிகள்
தீயில் மூழ்கிடும்
யாகமல்ல இது ..
தீயையே தினம்
தின்றுவளர்ந்த யாகங்கள்
தியாகங்கள் .. (தீ) யாகங்கள்
தீராத தாகங்கள் .

...................." வன்னியூர் செந்தூரன் "......



இனிமையைத்தொலைத்த


இனிமையைத்தொலைத்த
தனிமைத்தெருவிலே தவிப்பவனே
இனியாவது இளமையை விடியல் செய்
கனிமடியின் காலத்தில் காரியம் செய்

தெருவளையும் சுழிவுகளிலும்
தீராதவுறுதியை திடம்செய்பவனே
மானிடத்தின் மகிமையை படையல் செய்
வீணடித்த உறவுகளை விலக்கல் செய்

நன்மை தீமை நரகம் சொர்க்கமெல்லாம்
நாம் வகுத்த விதியென மொழி உரைப்பவனே
நீ செய்த தவறுக்காய் நித்தம் வருந்தாதே
நடந்த பாதையில் கடந்த முட்களை மனதிலேற்று

நிரந்தரமற்ற பூலோகவாழ்வதில் உயிரதே மாயையே
புகழென்ன உயர்வென்ன புரியாத போதை தான்
இகழ்வோரைக்கண்டு சினம் கொள்ளாதே
புகழ்வோரை சற்றுப்புறந்தள்ளிப் புத்திகொள்

– வன்னியூர் செந்தூரன்–

சாட்சி ......

வீரச் சாட்சி
வாளின் விளிம்பில்
வழியும் இரத்தம்
காதற் சாட்சி
விழியினோரம்
கசியும் ஊற்று
பெண்மைச் சாட்சி
மாதம் ஒழுங்கு
மலரும் விலக்கு
தரிக்கும் தாய்மை
கற்புச் சாட்சி
கட்டில் மேல்
கசங்கும் சேலை
காணும் யோகம்
கடவுள் சாட்சி
கையுயர்த்தும்
தெருப்பிச்சையின்
வதனச் சிரிப்பு
தர்மச் சாட்சி
ஏழை எளியவர்
கண்ணீர் கிழித்த
சாதமிடும் கெட்டவன்
கல்விச் சாட்சி
கிழிந்த புத்தகப்பை
குருவின் பழைய
பிரம்படித் தழும்புகள்
மரணத்தின் சாட்சி
மாத முடிவில்
ஊர் விருந்து
சுவரில் தொங்கும்
நினைவுப்படம்
யுத்தத்தின் சாட்சி
உக்கிப்போன எலும்புகள்
மக்கிப்போன உடலணுக்கள்
உயிர்குடித்த உலோகங்களின்
சமதுயில் சாபத்துடன் .........

(வன்னியூர் செந்தூரன் )

அடிப்படை ஏதடா..?

கரடான தரைமீது
கருக்கொண்ட கரும்பது
இனிக்காதென்று விதியில்லையே
காசு கொடுத்து வாங்கியதராசது
ஏழையின் எடையைக்குறைத்து என்றும்
பாகுபாட்டைப் புரிந்ததில்லையே
ஒய்யாரத்திற்கு ஓடி வியர்வை சிந்துவதற்கும்
ஓயாது உழைத்து வியர்வை ஓடுவதற்கும்
உடலியலில் ஒரே ஆரோக்கியக்கணக்கில்லையே
நெருப்பிலோ நீரிலோ மண்ணிலோ தேகம்
நிசம்தமடையும் ஆவியது காற்றாவதாய் ஐதீகம்
பஞ்சபூதங்களை விட மானிடனெவனும் மகானல்ல

– வன்னியூர் செந்தூரன்–

என் மனத்தோட்டத்து....



என்மனத்தோட்டத்து மலர்களில்
சிறுநீரைத்தூவி சிலிர்த்ததெல்லாம்
பால்தருமென நம்பியிருந்த
என்பட்டி மந்தைகள் தான்..
பசுமையான வெளியழகில்
பார்வை படர்கிறதாயினும்
சருகுகளைப்பற்றிய சங்கதி
சமகால வேதாந்தமாய் விரிகிறது..

– வன்னியூர் செந்தூரன்–



ஓவியத்திருமகளே



ஓவியத்திருமகளே
நீ தீட்டியது அத்தனையும் காகிதக்கிறுக்கலல்ல
காலத்தால் அழியாத காவியமென்பதறிவேன்
நீ வரும்போதெல்லாம் மலர்கள் சொரிவதில்லை
நீ பதுமையென சோலையும் அறிந்திருந்ததாலோ..?
சத்தியமாய் உனைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை



நெடுந்தீவின் நினைவிலே

ஆடுமயிலென்ன தோகைவிரிப்பதோ
அலையுதிர்க்கும் வர்ணக்கடலுடன்
பாடுமீனென்ன பயின்றுவந்ததோ
பசுந்தீவின் பரணிமொழி பாடவே


நெடுந்தீவு பயணத்தில்
நிலைத்து நின்ற நினைவுகளை
இதயத்தில் மீட்கையிலே
இதமான இன்பக்கலகம் தான்


தெய்வீகமுறையும் தீவெனச்சொல்வேன்
தெளிந்த காற்றைக்கொண்ட ஊரெனச்சொல்வேன்
ஒய்யாரத்தமிழ் வாழும் தனி நாடெனச்சொல்வேன்
ஓர்மத்தைக்கொண்ட பூர்வீகப்புலமெனச்சொல்வேன்


கல்வேலிக்குள் வாழும் கபடமற்ற மனதுகள்
கள்வரே நுழையாது காப்பரணாகும் கடல்மடி
ஆடிப்பாடி ஆனந்தமாய் வாழும் அச்சமற்ற குழவிகள்
நாடிவந்தோரை நெகிழச்செய்யும் வனப்புகள்


படகுப்பயணம் எனக்குப் பழக்கப்பட்டதென்பதால்
குறிகாட்டுவானிலிருந்து ஒருமணிநேரம் கடலிலே
ஏழுஆற்றுப்பிரிவடியில் ஆட்டம் சற்று அதிகம் தான்
குமுதினியின் நினைவுமட்டும் குறுக்கிட்டது மனதை


கோட்டைமுதல் பெருக்கமரம் நாகவுருக்கல்லென
நாள்முழுதும் சுற்றியது ஏழுகிலோமீற்றர் என்றனர்
பனாட்டுத்தட்டுகளும் ஆங்காங்கு கிட்டியது
பனைவெளிகளில் கோவுறுகழுதைகளும் முறைத்தது


படகிலே திரும்புகையில் பலவித பகிடிகள் தான்
பாக்கு வெற்றிலையும் நல்ல பொழுது போக்குத்தான்
முகிலனைப்பற்றியும் பெருமைப்பட்டார் ஐயாஒருவர்
ஆனந்தமானேன் நண்பனின் பெருமையெண்ணி


பாதையே இல்லாமலே இந்தப்பசுந்தீவு இருக்கட்டும்
பாலமொன்று வந்தால் பாழாகும் புனிதத்தீவு
முதன்முறையாய் அம்மண்ணைமுட்டி வருகையிலே
மூத்தஅப்பரம்பரையை பெருமையாய் நினைத்துவந்தேன்

–வன்னியூர் செந்தூரன்–



இதைத்தான் சொல்வேன்

முத்துவரிகளுக்கான சொத்தை இழந்து
பித்துப்பிடித்தது போல சிதறுண்டு
கத்தியழும் மனவெளியே அமைதிபெறு..



காலத்தைப் பதிவிட்ட உணர்வுக்கருவொன்று
ஞாலத்தில் சேவைக்கு முற்றுப்புள்ளியிடுகிறது.
நம்பிக்கை தந்தவனின் கையினி பேனாதொடாது.

இதயமுடைந்து அஞ்சலியிடும் அன்பர்களே.!
இளவலின் படைப்புகளை இயங்குநிலையாக்குங்கள்
இவனுயிர் உண்மையிலுறையும் உலகமதுதான்.

வாழும் போது துயரத்தை மறைத்திருப்பான்
மானிடத்திற்கு மகிழ்வை பரிசளித்திருப்பான்
மறைந்தும் மறையாது வாழ்ந்துகொண்டிருப்பான்

கவிஞர் நா.முத்துக்குமார் அண்ணாவின் கலை ஆத்மா தெய்வீகம் பெறட்டும்.
குறிப்பு– நான் முன்பொருமுறை தமிழகம் வந்தபோது உங்களுடன் தொலைபேசியில் உரையாடிய போது நீங்கள் அவசர வேலைகளில் இருந்தீர்கள் . மூன்று நாளுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன் . காத்திருங்கள் என்றீர்கள். ஆனால் அடுத்த நாளே நான் ஈழத்துக்கு வரவேண்டியிருந்ததால் உங்களை சந்திக்கமுடியவில்லை என்பது மனவருத்தமே இன்று..


சிறகா ? கயிறா??

கிரகம் தாண்டும் விரகத்தவிப்பை
கிரகிக்கத்தெரியாத சூரியனில்லை
நரகம் கொல்லும் துளிகளைத்தின்னும்
மனிதத்திலொருவனே நானுமென்பதுமறிவாய்


நீ மௌனத்தில் உண்ட மொழிகளிலெல்லாம்
என்மனதைத் தடவிச்சென்றிருக்கிறாய்
விழிபிதுங்கிய எதிர்பார்ப்புக்களிலெல்லாம்
என் அலைமனதை அமைதியாக்கியிருக்கிறாய்

குமரியென்பவளை குழந்தையாக்கி
மழலைச்சுவையை புகட்டிய பள்ளியறை நீ
சினமானவுன் கோபச்சொற்கள் கூட
சிரிப்பை பிச்சையிட்டிருக்கின்றன பலநாட்கள்

எல்லைக்கோடு வரையப்படாத எழுதுகோலுக்கு
அழகிய நந்தவனத்தைப் பரிசளித்தவள் நீ
பற்றிக்குமுறியெரிந்த அக்கினிச்சுவாலையில்
அரணிட்டு குளிர்மைதந்த குற்றாலம் நீ

பறவையின் சிறகுகளைக் கட்டிவிட்டு மகிழென்கிறாய்
சிறகறுப்பதே சிறப்பென்றால் கத்தியைத் தீட்டிவை
கயிற்றை அவிழ்ப்பதோ கடினமல்ல ..ஆனால்
அதற்கு அன்பென்ற அடையாளமிட்டிருக்கிறாயே..¡
– வன்னியூர் செந்தூரன்–


கலிகாலம்


மாமிச வாய்களும் 
மந்திரத்தை உச்சரிக்குது...
விசநெருடி முட்களும் 
வியாக்கியானம் பேசுது.... 
சொறி நாய்களும் 
சிம்மாசனம் கேட்குது ...

-----------" வன்னியூர் செந்தூரன் "------