Tuesday, March 28, 2017

நெடுந்தீவின் நினைவிலே

ஆடுமயிலென்ன தோகைவிரிப்பதோ
அலையுதிர்க்கும் வர்ணக்கடலுடன்
பாடுமீனென்ன பயின்றுவந்ததோ
பசுந்தீவின் பரணிமொழி பாடவே


நெடுந்தீவு பயணத்தில்
நிலைத்து நின்ற நினைவுகளை
இதயத்தில் மீட்கையிலே
இதமான இன்பக்கலகம் தான்


தெய்வீகமுறையும் தீவெனச்சொல்வேன்
தெளிந்த காற்றைக்கொண்ட ஊரெனச்சொல்வேன்
ஒய்யாரத்தமிழ் வாழும் தனி நாடெனச்சொல்வேன்
ஓர்மத்தைக்கொண்ட பூர்வீகப்புலமெனச்சொல்வேன்


கல்வேலிக்குள் வாழும் கபடமற்ற மனதுகள்
கள்வரே நுழையாது காப்பரணாகும் கடல்மடி
ஆடிப்பாடி ஆனந்தமாய் வாழும் அச்சமற்ற குழவிகள்
நாடிவந்தோரை நெகிழச்செய்யும் வனப்புகள்


படகுப்பயணம் எனக்குப் பழக்கப்பட்டதென்பதால்
குறிகாட்டுவானிலிருந்து ஒருமணிநேரம் கடலிலே
ஏழுஆற்றுப்பிரிவடியில் ஆட்டம் சற்று அதிகம் தான்
குமுதினியின் நினைவுமட்டும் குறுக்கிட்டது மனதை


கோட்டைமுதல் பெருக்கமரம் நாகவுருக்கல்லென
நாள்முழுதும் சுற்றியது ஏழுகிலோமீற்றர் என்றனர்
பனாட்டுத்தட்டுகளும் ஆங்காங்கு கிட்டியது
பனைவெளிகளில் கோவுறுகழுதைகளும் முறைத்தது


படகிலே திரும்புகையில் பலவித பகிடிகள் தான்
பாக்கு வெற்றிலையும் நல்ல பொழுது போக்குத்தான்
முகிலனைப்பற்றியும் பெருமைப்பட்டார் ஐயாஒருவர்
ஆனந்தமானேன் நண்பனின் பெருமையெண்ணி


பாதையே இல்லாமலே இந்தப்பசுந்தீவு இருக்கட்டும்
பாலமொன்று வந்தால் பாழாகும் புனிதத்தீவு
முதன்முறையாய் அம்மண்ணைமுட்டி வருகையிலே
மூத்தஅப்பரம்பரையை பெருமையாய் நினைத்துவந்தேன்

–வன்னியூர் செந்தூரன்–



No comments:

Post a Comment