Tuesday, March 28, 2017

உண்மை இதுதான்

ஆயுதமேந்திய சிலர் ஐக்கியமாய் அரசுடன் சுகபோக நல்லிணக்கம்.அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பலரோ அரசியல் கைதிகளாய் இன்றும்..
கட்டுநாயக்காவைத்தாண்டிவிட்டாலே பலருக்கு இனவுணர்வு ஊறிவிடுகிறது. பாதுகாப்பை உறுதிசெய்து பயணிக்கும் வர்க்கம்.
அரசின் காசிலுண்டு பந்தம் பிடித்து வளர்ந்து இனத்துக்காய் எத்தியாகமும் செய்யாத எட்டப்பர்கள் சிலர் எமக்கே இன்று சந்தர்ப்பவாதத்தலைமைகள்.
மாவீரனின் மருமகள் படைச்சிப்பாயுடன் உயிர்க்காதல். போராட அழைக்கையில் புறப்படாத பத்தினிகள் இன்று அரச இராணுவப்பணியில்..
விடுதலைப்பசியில் அலைந்த குடும்பங்கள் பல வீதியில் வறுமைப்பசியில் வாடும் போது .. போராட்டத்தை காரணமிட்டு வீசா பெற்ற நாடுகடந்தவனின் வியாக்கியானம் பரமசிவன் கழுத்தில் பாம்பு போலவே.
தன் இனம் அழிகையிலே தெருவுக்கு வந்து ஆர்ப்பரிக்கப்பயந்த பலர் உன்று திடீரென எழுகின்றனர் உணர்வுக்கோசமிட்டு .. இழந்தது மீழுமா..?
தன்னினம் அழிகையிலேனும் பதவிகளைத் துறக்க விரும்பாத அரசியல் ஞானிகள் இன்று ஊடகவீரமுரைப்பார். இணக்க அரசியலில் குதிப்பார். 
அடிக்கடி மாவீர்களுக்கு சுடரேற்றி மரியாதை செய்யும் படங்களை மறக்காமல் செய்திகளில் படரவிடுவார். ஆனால் தியாகப்புதல்வர்களின் நினைவாக ஒரு பொதுக்கல்லறை பத்தடியில் நிறுவகக்கூடிய திராணி இருக்கிறதா போலிகளே..?
எது எப்படியோ ''அவர் ''இருக்கும்போது இனம் ஒழுங்காயிருந்தது. அது பயபக்தி.சிலருக்கு பயம் சிலருக்கு பக்தி.அவர் வேறு எந்த இனத்திலேனும் பிறந்திருந்தால் நிச்சயம் என்றும் தொலைத்திருக்கமாட்டார்கள். அவர் யாரெனப்புரிகிறதா..? ஆனால் ஒன்றுமட்டும் உண்மை ஒற்றுமைகெட்ட இனம் ஒருபோதும் உருப்படாது. 



-வன்னியூர் செந்தூரன்-

No comments:

Post a Comment