Monday, March 27, 2017

முதுசத்தை இழந்த முல்லைமண்.

தமிழ்பேசி வழிநடந்த
மொழிச்சிகரம் சாய்ந்ததுண்மை
கலிகண்ட காலமது
கானகத்தமிழனைப் பறித்ததுண்மை
மாவீரன் பண்டாரவன்னியன் வரலாற்றில்
மீண்டுவந்தான் இந்த பேனாப் புருசனால்
அரசிகள் அழுவதில்லை அதிசயப்படைப்பது
மல்லிகைவனத்தையும் தடவ மறவாத மறவன்
வன்னியர்திலகமென வரைந்த ஓவியத்தூரிகை
கண்ணியம் கொண்ட எங்கள் கல்வியதிகாரி
தறிக்கப்பட்ட தடங்களை தாவிப்பிடித்ததால்
கமுகஞ்சோலை கூட கண்முன்னே நிற்கிறதே
குண்டுமழையில் நனைந்த குற்றாலவோடம்
காகிதத்தில் மிதத்திய கப்பல் மழைக்கோலம்
தமிழன்னை தந்த தவப்புதல்வனோ உணர்விலே
கொண்டு வந்த சீதனமாய் திடமானான் நெஞ்சிலே
அக்கினி குலத்திலுதித்த
சுக்கிலப்புதல்வனின் சூடாறாது என்றுமே
நாடகத்தந்தையே நீங்கள் போய்வாருங்கள்
விடைதந்தோம் பிரிவுக்காகவல்ல ஓய்வுக்காக
மரணம் என்பது மாற்றப்படமுடியாதது
மதிக்கு தெரிந்தாலும் மனதுக்கு என்ன பதில்..?
கலாநிதி முல்லைமணி ஐயாவின் இடைவெளியை
கலையுலகம் அண்மிக்கலாம் ஆனால் நிரப்பமுடியாது

–“காவியப்பிரதீபா,கவியருவி,தமிழ்ச்சுடர்”
கவிஞர் வன்னியூர் செந்தூரன்(கிழக்குப் பல்கலைக்கழகம் ,இலங்கை)


No comments:

Post a Comment